×

உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வு; 245 பணியிடத்துக்கு 12,037 பேர் போட்டி: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. தேர்வு நடந்த மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு நீதித்துறையில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பணியிடங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில் உரிமையியல் நீதிபதி பதவியில் காலியாக உள்ள 245 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் மாதம் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏராளமான வழக்கறிஞர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். இதில் 12,037 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆண்கள் 6031 பேர், பெண்கள் 6005 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் அடங்குவர். இந்த நிலையில் உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதல்நிலை தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று காலை நடந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது. முதல்நிலை தேர்வு 32 தேர்வு மையங்களில் 43 தேர்வு கூடங்களில் நடந்தது. தேர்வு கண்காணிப்பு பணியில் 42 தலைமை கண்காணிப்பாளர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னையை பொறுத்தவரை 4044 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக 13 மையங்களில் 14 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. முதல்நிலை தேர்வு காலை 9.30 மணிக்கு தான் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்வர்கள் காலை 7 மணி முதலே தேர்வு எழுத வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு கூடங்களுக்கு வெளியே இறுதிக்கட்டமாக தேர்வுக்கு தயாராகினர். தொடர்ந்து கடும் சோதனைக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு எழுத தேர்வு கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு நடைபெற்ற மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தேர்வு நடைபெற்ற அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post உரிமையியல் நீதிபதி பதவிக்கான எழுத்து தேர்வு; 245 பணியிடத்துக்கு 12,037 பேர் போட்டி: தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DNBSC ,Chennai ,Dinakaran ,
× RELATED ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப்...